Wednesday, December 31, 2008

பாடல் -16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்று தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

பொருள்:

(எல்லோரும் திருக்கோயில் முன் சென்று பாடுகின்றனர்)

உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்தகோபனுடைய திருக்கோயிலைக் காப்பவனே! கொடிகள் விளங்கித் தோன்றுகின்ற தோரண வாயிலைக் காப்பவனே! மணிக் கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாய்! இடையர்களின் சிறுமியராகிய எங்களுக்கு நோன்பு நிறைவுக்கான பறை ஒன்றைத் தருவதாக மாயனாகிய மணிவண்ணன் நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமான் துயில் எழுந்தருளுமாறு பாடுவதற்கு, உள்ளும், புறமும் தூயவர்களாய் நாங்கள் வந்தோம். உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்துச் சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாக பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கு!

பாடல் -15

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள், பண்டேஉன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக!
ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

எழுப்புவோர்: ஏடி! (ஏனடி, ஏண்டி) இளங்கிளியே! நீ இன்னமுமா உறங்குகின்றாய்?

எழாதிருப்பவள்: பெண்களே! "சில்" என்று கத்திக் கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்!

எழுப்புவோர்: நீ, மிகவும் கெட்டிக்காரி! உன் பேச்சுக்களை முன்னமே அறிந்திருக்கிறோம்! உன் வாயையும் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களேயானாலும் சரி! நானேதான் ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் நீ எழுந்துவா! இந்தக் கெட்டிக்காரத்தனம் தவிர உனக்கு என்று வேறு என்ன வைத்திருக்கின்றாய்?

எழாதிருப்பவள்: எல்லோரும் வந்துவிட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! நீ வந்து எண்ணிக்கொள்; குவலயாபீடம் என்னும் வலிய யானையைக் கொன்றவனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை, மாயனைப்பாடு!

பாடல் -14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்; நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

முந்தி வந்து உங்களை எழுப்புவேன் என்று வாயால் வெறும் பேச்சுப் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நாவின் நீட்சியையுடையவளே! உங்கள் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் உள்ள குளத்திலே செங்கழுநீர்ப் பூக்கள் பூத்தன; ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின; காவியாடை உடுத்தவரும், வெண்மையுடைய பற்களையுடையவருமான தவசீலர்கள், தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோயில்களைத் திறக்கச் சென்று விட்டனர்; சங்கு, சக்கரம் ஏந்திய நீண்ட திருக்கைகளையும் தாமரைக் கண்களையும் உடையவனைப் பாடுவோமாக!

பாடல் -13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

நம் பெருமான், பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்; கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன்; அவனுடைய வீரப்புகழைப் பாடிக்கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்க்குபோய்ப் புகுந்தனர்ல; விடிவெள்ளி தோன்றி விட்டது; வியாழன் மறைந்து விட்டது; பறவைகள் ஒலிக்கின்றன. மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவளே! பாவையே! இந்த நல்ல நாளில் நீ, உன் கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களோடு கலந்து கொண்டு, குளிரக் குளிரக் குடைந்து நீராடாமல், படுக்கையில் கிடக்கின்றாயா?

பாடல் -12

கனைத்திளங் கற்றெருமை கன்றூக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்;
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இளங்கன்றினையுடைய எருமைகள் கனத்து, தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றை நினைத்து நின்று, தம் முலை வழியாகப் பால் சொரிந்து நனைத்து, வீட்டைச் சேறாக்குகின்றன; அத்தகைய எருமைகளையுடைய நல்ல செல்வனுடைய தங்கையே! மார்கழி மாதப் பனி எங்கள் தலையிலே விழ, உன் வீட்டுக்கடை வாசலில் நிற்கின்றோம்; தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனைக் கோபத்தினால் அழித்த, நெஞ்சிற்கு இனியவனான இராமபிரானை நாங்கள் பாடுகின்றோம். கதவைத் திற! இது என்ன உறக்கம்? நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டாருக்கும் தெரிந்து விட்டது! இனியாவது எழுந்து வா!

பாடல் -11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இடையர், கன்றுகளையுடைய கறவைப் பசுக்கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்; குற்றம் ஒன்றுமில்லாதவர். அவர்களது, தங்கக் கொடி போன்ற பெண்ணே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே! எழுந்து வா! நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து, உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில்வண்ணன் திருநாமத்தைப் பாடுகின்றோம். செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமலும், பேசாமலும், நீ எதற்காக இவ்வாறு உறங்குகின்றாய்? இதற்குப் பொருள்தான் என்ன?

பாடல் -10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்பால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள்.
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

பொருள்:

விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! வாசற் கதவைத் திறக்காதவராயினும் பதிலுங்கூடவா சொல்ல மாட்டார்கள்? மணக்கின்ற துளசி மாலையைத் திருமுடியில் அணிந்த நாராயணன், நம்மால் போற்றத்தக்க நம் நோன்புப் பரிசான பேரின்பத்தை நல்குவான்; புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயிலே போய் விழுந்த கும்பகருணன் உறங்கும் போட்டியில் உனக்குத் தோல்வியடைந்து அவனுடைய பேருறக்கத்தை உனக்குத் தந்தானா? ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறற்கரிய ஆபரணம் போன்றவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திற!