Wednesday, December 31, 2008

பாடல் -16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்று தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

பொருள்:

(எல்லோரும் திருக்கோயில் முன் சென்று பாடுகின்றனர்)

உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்தகோபனுடைய திருக்கோயிலைக் காப்பவனே! கொடிகள் விளங்கித் தோன்றுகின்ற தோரண வாயிலைக் காப்பவனே! மணிக் கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாய்! இடையர்களின் சிறுமியராகிய எங்களுக்கு நோன்பு நிறைவுக்கான பறை ஒன்றைத் தருவதாக மாயனாகிய மணிவண்ணன் நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமான் துயில் எழுந்தருளுமாறு பாடுவதற்கு, உள்ளும், புறமும் தூயவர்களாய் நாங்கள் வந்தோம். உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்துச் சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாக பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கு!

பாடல் -15

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள், பண்டேஉன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக!
ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

எழுப்புவோர்: ஏடி! (ஏனடி, ஏண்டி) இளங்கிளியே! நீ இன்னமுமா உறங்குகின்றாய்?

எழாதிருப்பவள்: பெண்களே! "சில்" என்று கத்திக் கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்!

எழுப்புவோர்: நீ, மிகவும் கெட்டிக்காரி! உன் பேச்சுக்களை முன்னமே அறிந்திருக்கிறோம்! உன் வாயையும் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களேயானாலும் சரி! நானேதான் ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் நீ எழுந்துவா! இந்தக் கெட்டிக்காரத்தனம் தவிர உனக்கு என்று வேறு என்ன வைத்திருக்கின்றாய்?

எழாதிருப்பவள்: எல்லோரும் வந்துவிட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! நீ வந்து எண்ணிக்கொள்; குவலயாபீடம் என்னும் வலிய யானையைக் கொன்றவனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை, மாயனைப்பாடு!

பாடல் -14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்; நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

முந்தி வந்து உங்களை எழுப்புவேன் என்று வாயால் வெறும் பேச்சுப் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நாவின் நீட்சியையுடையவளே! உங்கள் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் உள்ள குளத்திலே செங்கழுநீர்ப் பூக்கள் பூத்தன; ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின; காவியாடை உடுத்தவரும், வெண்மையுடைய பற்களையுடையவருமான தவசீலர்கள், தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோயில்களைத் திறக்கச் சென்று விட்டனர்; சங்கு, சக்கரம் ஏந்திய நீண்ட திருக்கைகளையும் தாமரைக் கண்களையும் உடையவனைப் பாடுவோமாக!

பாடல் -13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

நம் பெருமான், பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்; கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன்; அவனுடைய வீரப்புகழைப் பாடிக்கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்க்குபோய்ப் புகுந்தனர்ல; விடிவெள்ளி தோன்றி விட்டது; வியாழன் மறைந்து விட்டது; பறவைகள் ஒலிக்கின்றன. மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவளே! பாவையே! இந்த நல்ல நாளில் நீ, உன் கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களோடு கலந்து கொண்டு, குளிரக் குளிரக் குடைந்து நீராடாமல், படுக்கையில் கிடக்கின்றாயா?

பாடல் -12

கனைத்திளங் கற்றெருமை கன்றூக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்;
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இளங்கன்றினையுடைய எருமைகள் கனத்து, தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றை நினைத்து நின்று, தம் முலை வழியாகப் பால் சொரிந்து நனைத்து, வீட்டைச் சேறாக்குகின்றன; அத்தகைய எருமைகளையுடைய நல்ல செல்வனுடைய தங்கையே! மார்கழி மாதப் பனி எங்கள் தலையிலே விழ, உன் வீட்டுக்கடை வாசலில் நிற்கின்றோம்; தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனைக் கோபத்தினால் அழித்த, நெஞ்சிற்கு இனியவனான இராமபிரானை நாங்கள் பாடுகின்றோம். கதவைத் திற! இது என்ன உறக்கம்? நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டாருக்கும் தெரிந்து விட்டது! இனியாவது எழுந்து வா!

பாடல் -11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இடையர், கன்றுகளையுடைய கறவைப் பசுக்கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்; குற்றம் ஒன்றுமில்லாதவர். அவர்களது, தங்கக் கொடி போன்ற பெண்ணே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே! எழுந்து வா! நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து, உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில்வண்ணன் திருநாமத்தைப் பாடுகின்றோம். செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமலும், பேசாமலும், நீ எதற்காக இவ்வாறு உறங்குகின்றாய்? இதற்குப் பொருள்தான் என்ன?

பாடல் -10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்பால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள்.
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

பொருள்:

விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! வாசற் கதவைத் திறக்காதவராயினும் பதிலுங்கூடவா சொல்ல மாட்டார்கள்? மணக்கின்ற துளசி மாலையைத் திருமுடியில் அணிந்த நாராயணன், நம்மால் போற்றத்தக்க நம் நோன்புப் பரிசான பேரின்பத்தை நல்குவான்; புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயிலே போய் விழுந்த கும்பகருணன் உறங்கும் போட்டியில் உனக்குத் தோல்வியடைந்து அவனுடைய பேருறக்கத்தை உனக்குத் தந்தானா? ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறற்கரிய ஆபரணம் போன்றவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திற!

பாடல் -9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன் மாதவன் வைகுந்த' னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

பொருள்:

தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் அரியவும், அகில் முதலியவற்றின் புகை மணக்கவும், தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையின் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகளை இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை; ஆதலால் அவள் தாயை அழைத்து, அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்.) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்குப் பதிலே சொல்லாதலால் ஊமையோ? அல்லது (Kஏளாத_ செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டுக் கிடக்கிறாளோ? "மாமாயனே! மாதவனே! வைகுந்தனே!" என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை; அவளை எழுப்ப மாட்டீர்களா?

பாடல் -8

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் ப்றைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

பொருள்:

மனம்கிழ்ச்சியுடைய பெண்ணே! கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிதுநேரம் விடுதலை பெற்று மேய்வதற்க்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற்குப் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர்; அவர்களைப் போக விடாமல் நிறுத்திவைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம், எழுந்துவா! நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்; கம்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன்; தேவர்கள் எல்லார்க்கும் பெரிய தேவன்! அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், "ஆ" என்று வாய் திறந்து இரக்கம் காட்டி "வா" என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.

பாடல் -7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

பொருள்:

துயிலும் பெண்ணே! "கீசி கீசு" என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து பேசின. அந்தப் பேச்சின் ஒலி உனக்குக் கேட்கவில்லையா? மணம் பொருந்திய கூந்தலையுடைய இடைச்சியர் தங்கள் கழுத்தில் உள்ள அச்சுத் தாலியும், ஆமைத்தாலியும் "கலகல" என்று ஒலிக்க, கைகளை அசைத்து, மத்தினால் கடைந்து ஒசைப்படுத்தும் தயிரின் ஒலியும் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணனாகிய மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடுகின்றோம்; நீ கேட்டுக்கொண்டே கிடக்கின்றாயோ? ஒளியுடையவலே! கதவைத்திற!

Sunday, December 21, 2008

பாடல் -6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இதோ, பறவைகள் குரலெழுப்பத் தொடங்கி விட்டன, இன்னுமா உறங்குகிறாய்? பறவைகளுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட நம் நாயகனின் கோயிலில் ஊதுகின்ற வெண்சங்கின் பேரொலி உன் காதில் விழவில்லையா? பேய் மகளான பூதனை தனது தனத்தில் தடவி வந்த நஞ்சை அவள் உயிருடன் உறிஞ்சிக் குடித்தவனும், கள்ளத்தனமாக கடும் வேகத்தில் வந்த வண்டி உடைந்து சிதையுமாறு உதைத்தவனும், திருப்பாற்கடலில் அறிதுயில் கொண்டிருப்பவனுமாகிய நாராயணனை உள்ளத்தில் எண்ணி தியானம் செய்யும் ரிஷிகளும் யோகிகளும் மெதுவாக எழுந்து 'ஹரி ஹரி' என்று கூறும் ஒலி உனது உள்ளத்தில் புகுந்து குளிரவில்லையா? இனியாவது எழுந்திரு.

பாடல் -5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்:

மாயச் செயல்களைச் செய்தவனும் வடமதுரையில் அவதரித்தவனும் யமுனைக் கரையில் வசிப்பவனும் கோகுலத்தில் தோன்றிய சோதியும் பெற்ற வயிற்றுக்குத் தன் பிறப்பினால் பெருமை உண்டாக்கியவனும் ஆகிய கண்ணபிரானை நாங்கள் தூய்மையுடன் வந்து மலர்களைத் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனமாரத் தியானித்தால் செய்த பாவங்களும் செய்யப்போகின்ற பாவங்களும் தீயில் இட்ட தூசு போல எரிந்து மறைந்துவிடும். எனவே அவனது திருநாமங்களைச் சொல்வாய்.

பாடல் -4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

கடல் போன்று கம்பீரமான மழைக்கு உரிய அண்ணலே! எதையும் நீ மறைக்காதே. கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகயத்திலேறி, காலம் முதலான எல்லாவற்றிற்கும் முதற்காரணனான எம்பெருமானுடைய திருமேனி போல் கறுத்து, வலிமை பொருந்திய அழகிய தோள்களைக் கொண்ட அவனது கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, வலம்புரிச் சங்கு போல முழங்கி, சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து கிளம்பும் அம்பு மழை போல, உலகினர்க்கு வாழ்வளிக்கவும் நாங்கள் மார்கழி நீராடவும் விரைவில் பெய்வாயாக!

Thursday, December 18, 2008

பாடல் -3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்ந லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

ஓங்கி வளர்ந்து உலகங்களைத் தம் திருவடியால் அளந்த (நினைக்க: மகாபலி சக்ரவர்த்தி கதை... வாமன அவதாரம்) ஸ்ரீமன் நாராயணின் திருநாமங்களைப் பாடி பாவை நோன்பிற்காக நாங்கள் நீராடினால், நாடு முழுவதும் எந்தவிதத் தீங்கும் இல்லாமல் மாதம் மூன்று மழை பெய்யும் அதனால் உயர்ந்து வளர்ந்து விளங்கும் செந்நெற் பயிற்களின் ஊடே தண்ணீர் மிகுதியால் கயல்மீன்கள் துள்ளும்; அழகிய குவளை மலர்களில் வண்டுகள் உறங்கும்; கறப்பவர்கள் மடிகளைப் பற்றி இழுக்க, பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்து விடும். இப்படியாக நீர்வளம், நிலவளம் மற்றும் பால்வளம் மிகுந்து அழிவற்ற செல்வம் நிறையும்.

Tuesday, December 16, 2008

பாடல் -2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

பூமியில் வாழப் பிறந்தவர்களே! உய்யும் வகையை எண்ணி மகிழ்ந்து, நமது பாவை நோன்பிற்கான நெறிமுறைகளைக் கேளுங்கள். பாற்கடலில் அறிதுயில் கொள்கின்ற பரமனின் திருவடிகளைப் பாடி, விடியற்காலத்தில் நீராடுவோம்; தானத்தையும் பிச்சையையும் செருக்கு இல்லாமல் கொடுப்போம்; நெய்யும் பாலும் உண்ணமாட்டோம்; கூந்தலைப் பூச்சூட்டி முட்க்கமாட்டோம்; பெரியோர் செய்யாதவற்றைச் செய்ய மாட்டோம்; கண்ணபிரானிடம் போய், பிறருக்குத் தீமை உண்டாகுமாறு கோள் சொல்லமாட்டோம்.

பாடல் -1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

இது மார்கழி மாதம், பௌர்ணமி நன்னாள். அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களே! சீர்மிக்கக் கோகுலத்தின் செல்வச் சிறுமிகளே! உலகோர் புகழும்படி நோன்பு செய்து நீராடுவோம், வாருங்கள். நந்தகோபனின் புதல்வனும், யசோதையின் சிங்கக்குட்டியும், மேகத்தை ஒத்த கருமேனி கொண்டவனும், செந்தாமரை மலர் போன்ற கண்கள் கொண்டவனும், சந்திரன் போன்ற முகம் கொண்டவனுமான ஸ்ரீமந்நாராயணன், நமது நோன்பிற்கான அருளைப் பொழிவான்.